தனியன் 1:
நீளாதுங்கஸ்த நகிரிதடீஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிஸதஸிரஸ்ஸித்தமத்யாபயந்தீ|
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:||
பதவுரை:
யா கோதா- எந்த ஆண்டாள்,
நீளா துங்கஸ்தன கிரி தடீ ஸுப்தம் — நப்பின்னைப் பிராட்டியினுடைய திருமார்பிலே உறங்குபவனாய்,
ஸ்வோச் சிஷ்டாயாம்- தன்னாலே சூடிக்களையப்பட்ட,
ஸ்ரஜி-மாலையிலே,
நிகளிதம்-கட்டப்பட்டவனாயிருக்கும்,
க்ருஷ்ணம்-க்ருஷ்ணனாகிற ஸிம்ஹத்தை,
உத்போத்ய-(துயில்)உணர்த்தி,
ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தம்-நூற்றுக்கணக்கான வேதாந்த வாக்கியங்களினால் ஸித்திக்கிற,
ஸ்வம் – தன்னுடைய,
பாரார்த்யம்-பாரதந்த்ர்யத்தை,
அத்யாபயந்தீ-அறிவித்து
பலாத்க்ருத்ய-வலுக்கட்டாயமாக
புங்க்தே-அனுபவிக்கிறாளோ,
தஸ்யை- அப்படிப்பட்ட ஆண்டாளுக்கு
பூயோ பூய ஏவ- மறுபடியும் மறுபடியும்,
இதமிதம் நம: நன்றியோடுகூடின நமஸ்காரம்
அஸ்து-ஆகவேண்டும்.
தனியன் 2:
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
பதவுரை:
அன்ன வயல் – அன்னப்பறவைகள் (ஹம்ஸங்கள்) ஸஞ்சரிக்கிற வயலையுடைய,
புதுவை ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூரிலே திருவவதரித்தருளின ஆண்டாள்,
அரங்கற்கு-ஸ்ரீரெங்கநாதனுக்கு
பன்னு-ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட,
திருப்பாவை- திருப்பாவையாகிற,
பல் பதியம் -பல பாட்டுக்களை,
இன் இசையால்- செவிக்கினிய இசையாலே,
நல் பாமாலை-அழகிய பாட்டுக்களாகிற மாலையை,
பாடிக் கொடுத்தாள்-பாடிக் கொடுத்தாள்,
பூமாலை-பூக்களால் ஆன மாலையை,
சூடிக் கொடுத்தாளை-(தன் திருக்குழலிலே) சூடி (எம்பெருமானுக்குக்) கொடுத்தவளான ஆண்டாளை
சொல்- (நெஞ்சே அனுஸந்திப்பாயாக) பாடுவாயாக.
தனியன் 3:
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்!-நாடி நீ
வேங்கடவற்கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.
பதவுரை:
சூடி- (மாலையை திருக்குழலிலே) சூடி,
கொடுத்த—(எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த,
சுடர் கொடியே-பிரகாசிக்கும் பொற்கொடிபோன்ற வடிவையுடையவளே!
தொல்-பழமையான,
பாவை-திருப்பாவையை,
பாடி அருளவல்ல-பாடி உபகரிக்க வல்லவளாய்,
பல் வளையாய் – பல வளைகளை அணிந்தவளாய் விளங்குபவளே!
நாடி- (மன்மதனை) அடைந்து,
‘நீ-(மன்மதனான) நீ.
என்னை- (அவனைக் காண ஆசைப்படுகிற) அடியேனை.
வேங்கடவற்கு—திருவேங்கட மலையிலே வாழும் எம்பெருமானுக்கு,
விதி- (கைங்கர்யம் செய்யும்படி) விதிக்கவேணும்’.
என்ற-என்று அருளிச்செய்த,
இம் மாற்றம்-இப்பாசுரத்தை,
நாம்- (உனக்கு என்றும் அடியராயிருக்கிற) நாம்
கடவா வண்ணமே – மீறாதபடி,
நல்கு-உபகரிக்கவேண்டும், கடாக்ஷிக்கவேண்டும்.