ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
திருப்பாவை – பாசுரம் 1:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
பதவுரை:
மார்கழித்திங்கள்- (பரம வைஷ்ணவமான) மார்கழி மாதமாகவும்,
மதிநிறைந்த நல் நாள்- சந்திரன் பூர்ணமாயுள்ள அழகிய நாளாகவும் இருக்கிறது;
நீராட போதுவீர்- கண்ணணுடைய வைபவங்களிலே இஷ்டமுடையவர்கள்
போதுமின் – வாருங்கள்;
நேர் இழையீர்- அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!
சீர் மல்கும்-செல்வம் நிறைந்துள்ள,
ஆய்ப்பாடி-திருவாய்ப்பாடியிலுள்ள
செல்வச் சிறுமீர்காள்- (பகவத் ஸம்பந்தமாகிற) செல்வத்தையும், இளம் பருவத்தையுமுடைய பெண்களே!
கூர்வேல்-கூரிய வேலை உடையவரும்,
கொடும் தொழிலன்-(கண்ணனுக்கு தீங்கு செய்யவரும் சிறு ஜந்துக்கள் விஷயத்திலும்) கொடுமையான கோபத்தை உடையவருமான,
நந்தகோபன் – ஸ்ரீநந்தகோபருடைய,
குமரன்-பிள்ளையாய்,
ஏர் ஆர்ந்த கண்ணி-அழகு நிறைந்த திருக்கண்களை உடையவளான,
யசோதை-யசோதைப் பிராட்டிக்கு,
இளம் சிங்கம்-சிங்கக் குட்டிபோல் இருக்குமவனாய்,
கார்-கரியமேகம் போன்ற,
மேனி-திருமேனியையும்,
செம் கண்-சிவந்த கண்களையும்,
கதிர் மதியம் போல் முகத்தான்-சூரியனையும், சந்திரனையும் போன்ற திருமுகத் தையும் உடையவனான,
நாராயணனே- ஸ்ரீமந்நாராயணனே
நமக்கே – நமக்கு,
பறை-நம்முடைய விருப்பத்தை,
தருவான்- நிறைவேற்றிக் கொடுப்பவன்;
பாரோர்- (என்று) இவ்வுலகிலுள்ளோர்,
புகழ–கொண்டாடும் படி,
படிந்து-இந்நோன்பிலே ஈடுபட வேண்டும்
எம்பாவாய் – எம்பிள்ளாய்.