பாசுரம்:
கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
கற்றுக் கறவை – கன்றுபோலேயிருக்கும் பசுக்களுடைய
பல கணங்கள் – பல கூட்டங்களையும்
கறந்து- கறப்பவர்களாய்
செற்றார் -எதிரிகளினுடைய
திறல் அழிய- பலம் அழிந்து போகும்படி
சென்று-(படையெடுத்துப்) போய்
செருச் செய்யும்-போர் புரியுமவர்களாய்
குற்றம் ஒன்று இல்லாத- ஒருவிதமான குற்றமற்றவர்களான
கோவலர்தம்- ஆயர்களுடைய (குலத்தில் பிறந்த)
பொன் கொடியே- பொன் கொடிபோன்றவளே!
புற்று அரவு அல்குல் – புற்றிலிருக்கும் பாம்பின் படம்போலேயுள்ள நிதம்ப ப்ரதேசத்தையுடையவளாய்.
புன மயிலே – தன் நிலத்திலேயுள்ள மயில் போன்று இருப்பவளே!
போதராய்-புறப்பட்டு வருவாயாக
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும்- (உனக்கு) உறவினரான தோழிகள்
அனைவரும்
வந்து – (சேர்ந்து) வந்து
நின் முற்றம் புகுந்து— உன்னுடைய மாளிகை முற்றத்திலே புகுந்து
முகில் வண்ணன் பேர்பாட – நீலமேக வண்ணனான கண்ணபிரானுடைய
திருநாமங்களைப் பாடியும்
செல்வப் பெண்டாட்டி நீ—(எங்களுக்கு) எல்லாச் செல்வமுமாயிருக்கும் நீ
சிற்றாதே பேசாதே- அசையாமலும், பேசாமலும்.
உறங்கும் பொருள் எற்றுக்கு— உறங்கும் காரியம் எதற்காகவோ?