திருப்பாவை பாசுரம் 12 பதவுரை

பாசுரம்:

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தா னெழுந்திரா யீதென்ன பேருறக்கம்

அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்.

பதவுரை:

இளம் கன்று எருமை-இளங் கன்றுகளையுடைய எருமைகளானவை

கனைத்து—(பால் கறப்பாரில்லாமையாலே) கதறிக்கொண்டு

கன்றுக்கு இறங்கி-(தம்) கன்றுகளிடம் இரக்கங்கொண்டு

நினைத்து-அக்கன்றுகளை  நினைத்து

முலைவழியே நின்று பால் சோர-(அந்நினைவின் முதிர்ச்சியாலே)

முலைகளின் வழியாகப் பால் இடைவிடாமல் பெருக

இல்லம் நனைத்து–(அதனால்) வீடு முழுவதும் ஈரமாக்கி

சேறு ஆக்கும்- (துகைத்துச்) சேறாக்கும்படியிருப்பவனாய்

நல் செல்வன் – க்ருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையவனானவனுடைய 

தங்காய்-தங்கையே! 

தலை பனி வீழ- (எங்கள்) தலையிலே பனி பெய்யும்படியாக

நின் வாசல் கடை பற்றி- உன் வாசற்கடையைப் பிடித்துக்கொண்டு

தென் இலங்கை கோமானை – செல்வத்தையுடைத்தான இலங்கைக்கு அரசனான ராவணனை 

சினத்தினால் செற்ற-(பிராட்டியைப்

பிரித்தான்) என்னும் கோபத்தாலே கொன்றவனாய்

மனத்துக்கு இனியானை-மனதிற்கு இனிமையைத் தருமவனான இராமபிரானை

பாடவும்-(நாங்கள்) பாடியபோதிலும், 

நீ வாய் திறவாய்-நீ வாய் திறந்து பேசுகிறாயல்லை

இனித்தான்-இனியாவது

எழுந்திராய் – எழுந்திருப்பாயாக; 

ஈது என்ன பேருறக்கம்- இது என்ன பெருந்தூக்கம்? 

அனைத்து இல்லத்தாரும் – (ஆய்ப்பாடியிலுள்ள) எல்லா வீட்டினராலும்

அறிந்து- (உன்னுடைய பெருந்தூக்கம்) அறியப்பட்டுவிட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top