திருப்பாவை பாசுரம் 15 பதவுரை

பாசுரம்:

எல்லே இளங்கிளியே இன்ன முறங்குதியோ

சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக

ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்

பதவுரை:

இளம் கிளியே -(பேச்சிலும் அழகிலும்) இளமை

தங்கிய கிளிபோலிருப்பவளே! 

எல்லே- (உன் பேச்சின்

இனிமை) என்னே! 

இன்னம்-எல்லோரும் வந்து நின்ற பிறகும்

உறங்குதியோ – தூங்குகிறாயோ? (என்று எழுப்ப)

நங்கைமீர்- பெண் பிள்ளைகளே! 

சில் என்று அழையேன்மின்-

சிலுகு சிலுகு என்று அழைக்காதீர்கள்

போதர்கின்றேன்-

(இப்போதே) புறப்பட்டு வருகிறேன் (என்று உள்ளிருப்பவள் விடைகூற,) 

வல்லை-(வாய்ப்பேச்சில் நீ ) ஸமர்த்தையாயிராநின்றாய்

 உன் கட்டுரைகள்—உன்னுடைய கடுஞ்சொற்களையும்

உன் வாய்-உன்னுடைய வாயையும். 

பண்டே அறிதும்- நெடுங்காலமாகவே நாங்கள் அறிவோம் (என்று எழுப்பு

கிறவர்கள் சொல்ல) 

நீங்களே வல்லீர்கள்—(இப்படி எதிர்வாதம் செய்யும்) நீங்களே வாய் வன்மையுடையவர்கள்

நானேதான் ஆயிடுக-(அன்றிக்கே) நானேவாய்வன்மையுடையவளாய் இருக்கட்டும் (உங்களுக்கு நான் செய்ய வேண்டுவதென்? என்று உள்ளிருப்பவள் கேட்க) 

நீ -நீ  

ஒல்லை போதாய்- சீக்கிரம் எழுந்திருப்பாயாக

உனக்கு என்னவேறுஉடையை- உனக்கு என்று வேறு என்ன பலனை நீ உடையவளாயிருக்கிறாய்? (என்று உணர்ந்தவர்கள் வினவ)

எல்லாரும் போந்தாரோ – (வரவேண்டியவர்) யாவரும் வந்தனரோ? (என்று உள்ளிருப்பவள்கேட்க)

போந்தார் – (எல்லோரும்) வந்தனர்

போந்து எண்ணிக்கொள்-(நீயும்) வந்து எண்ணிப் பார்த்துக்கொள் (என்று உணந்தவர்கள் சொல்ல, நான்வெளிவந்து செய்யவேண்டுவதென் என்று உள்ளிருப்பவள் உசாவ)

வல்லானை-(குவலயாபீடமென்னும்)வலிய யானையை

கொன்றானை – அழித்தவனும்

மாற்றாரை–சத்துருக்களை மாற்று

அழிக்கவல்லானை-வலியற்றவர்களாகச் செய்ய வல்லவனும்

மாயனை – ஆச்சரியமான செய்கைகளை கண்ணனை 

பாட – பாடுவதற்காக (எழுந்திராய் என்று அழைக்கிறார்கள்.)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top