பாசுரம்:
குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதுந் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
குத்து விளக்கு-நிலைவிளக்கானது
எரிய- எரியா நிற்க
கோடு கால் கட்டில் மேல்-யானைத் தந்தங்களால் செய்த கால்களையுடைய கட்டிலிலே
மெத்தென்ற – மெத்தென்றிருக்கும்
பஞ்ச சயனத்தின் மேல் ஏறி-பஞ்சினாலான படுக்கையின் மீது ஏறி
கொத்து அலர் பூ குழல்-கொத்துக்
கொத்தாக மலரும் பூக்களை அணிந்த குழலையுடைய
நப்பின்னை- நப்பின்னைப் பிராட்டியுடைய
கொங்கைமேல் – திருமுலைத் தடங்களின்மேலே
வைத்து கிடந்த மலர் மார்பா-
(தன்னுடைய) அகன்ற மார்பை வைத்துக் கிடப்பவனே!
வாய் திறவாய்–வாய் திறந்து வார்த்தை சொல்லுவாயாக
மைதடம் கண்ணினாய்-மையிட்டலங்கரித்த பரந்த கண்களை உடையவளே!
நீ-நீ
உன் மணாளனை-உனக்குக் கணவனான கண்ணனை
எத்தனை போதும்-ஒரு கணநேரமும்
துயில் எழ- திருப்பள்ளியெழ
ஒட்டாய்காண்-சம்மதிக்கிறாயில்லை
எத்தனையேலும் – சிறிதுபோதும்
பிரிவு ஆற்றகில்லாய் ஆல்-(அவனை
விட்டுப்) பிரிந்திருப்பதைப் பொறுக்கிறாயல்லை அன்றோ
தத்துவம் அன்று- (இது)உன் ஸ்வரூபத்துக்கும் தகுந்ததன்று
தகவு அன்று- உன் ஸ்வபாவத்துக்கும் தகுந்ததன்று