பாசுரம்:
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை:
வையத்து – இப்பூவுலகில்.
வாழ்வீர்காள்- வாழப்பிறந்தவர்களே!,
நாமும்-(அவனாலே பேறு என்றிருக்கும்) வையத்து வாழ்வீர்காள் நாமும்.
உய்யும் ஆறு எண்ணி-உஜ்ஜீவிக்கும் உபாயத்தை உணர்ந்து,
உகந்து-மகிழ்ச்சியுடன்,
நம் பாவைக்கு- நம்முடைய நோன்புக்கு.
செய்யும் கிரிசைகள்—பண்ணும்
காரியங்களை
கேளீரோ – கேளுங்கள்;
பால் கடலுள்-திருப்பாற்கடலினுள்.
பைய துயின்ற பரமன் -கள்ளநித்திரை கொள்ளும் புருஷோத்தமனுடைய.
அடிபாடி- திருவடிகளைப் பாடி.
ஐயமும் -தகுந்தவர்களுக்குக் கொடுக்கும் பொருளையும்.
பிச்சையும் —(ப்ரஹ்மசாரிகளுக்கும் ஸந்யாஸிகளுக்கும்
கொடுக்கும்) பிக்ஷையையும்.
ஆந்தனையும் — (அவர்கள்) கொள்ளவல்லராயிருக்குமளவும்.
கை காட்டி- கொடுத்தும்.
நெய் உண்ணோம்-நெய் புசிக்கமாட்டோம்;
பால் உண்ணோம்- பாலும் அமுதுசெய்யமாட்டோம்;
நாட்காலே – விடியற் காலையில்,
நீராடி- ஸ்நாநம் செய்துவிட்டு,
மை இட்டு எழுதோம்-(கண்ணில் மையிட்டு அலங்கரித்துக்கொள்ள மாட்டோம்;
மலர் இட்டு நாம் முடியோம்-பூக்களைக்கொண்டு குழலிலே
முடியமாட்டோம் நாங்கள்;
செய்யாதன-(பெரியோர்கள்) செய்யாதவற்றை,
செய்யோம் – செய்யமாட்டோம்;
தீக்குறளை – (பிறருக்கு) அநர்த்தத்தைத்தரும் கோட்சொற்களை,
சென்று ஓதோம்-(எம்பெருமானிடம்) சென்று சொல்லமாட்டோம்.