பாசுரம்:
மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணாவுன்
கோயில்நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
மாரி – மழைகாலத்தில்
மலைமுழஞ்சில் – மலைக் குகையொன்றில்
மன்னிகிடந்து — (பேடையோடு
ஒன்றாகப்) பொருந்திக்கிடந்து
உறங்கும் – தூங்குகின்ற
சீரிய சிங்கம்-(வீர்யமாகிய) சீர்மையை உடைய சிங்கம்
அறிவுற்று- உணர்ந்தெழுந்து
தீ விழித்து- நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர் – பரிமளம் நிரம்பிய பிடரி
மயிர்கள்
பொங்க- எழும்படி
எப்பாடும் – எல்லாப் பக்கங்களிலும்
பேர்ந்து – அசைந்து
உதறி – (தேஹத்தை) உதறி
மூரி நிமிர்ந்து-உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து
முழங்கி-கர்ஜனை செய்து
புறப்பட்டு- வெளிப்புறப்பட்டு
போதரும் ஆ போலே – வருகிறது போல்
பூவை பூ வண்ணா-காயாம்பூ போல் நிறத்தையுடையவனே!
நீ-நீ
உன் கோயில் நின்று- உன்னுடைய திருக்கோயிலிலிருந்து
இங்ஙனே போந்தருளி – இவ்விடத்திலே எழுந்தருளி
கோப்பு உடைய – அழகிய
அமைப்பையுடைய
சீரிய-மேன்மைபெற்ற
சிங்காசனத்து-
ஸிம்ஹாஸனத்தின்மீது
இருந்து -எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம் – நாங்கள் (மநோரதித்துக்கொண்டு) வந்த
காரியத்தை
ஆராய்ந்து அருள்-விசாரித்தருளவேணும்.