பாசுரம்:
அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
அன்று—(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியினால் வருந்திய) அக்காலத்தில்
இவ்உலகம்-இந்த உலகங்களை
அளந்தாய்-(இரண்டடிகளால்) அளந்தருளியவனே!
அடி—(உன்னுடைய அந்தத்) திருவடிகள்
போற்றி—பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
அங்கு-இராவணன் இருக்குமிடத்தில்
சென்று-எழுந்தருளி
தென் இலங்கை-(அவன் நகராகிய) அழகிய இலங்கையை
செற்றாய்-அழித்தவனே!
திறல்-(உன்னுடைய) பலம்
போற்றி-பல்லாண்டு வாழ்க!
சகடம்-சகடாசுரனானவன்
பொன்ற-அழிந்துபோகும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத்தவனே!
புகழ்—(உன்னுடைய) கீர்த்தியானது
போற்றி – நீடூழி வாழ்க
கன்று- கன்றாய் நின்ற வத்ஸாஸுரனை
குணிலா-எறிதடியாகக் கொண்டு
எறிந்தாய்-(விளங்கனியாய் நின்ற அஸுரன்மீது) எறிந்தருளியவனே!
கழல்-(அப்போது மடக்கிநின்ற) உன்
திருவடிகள்
போற்றி – நீடூழி வாழ்க
குன்று-கோவர்த்தந மலையை
குடையா – குடையாக
எடுத்தாய்-தூக்கினவனே!
குணம் -லௌசீல்யம் முதலான உன் குணங்கள்
போற்றி- பல்லாண்டு விளங்கவேணும்
வென்று-(எதிரிகளை) ஜயித்து
பகை கெடுக்கும்-அப்பகைவர்களை அழியச்செய்யும்
நின் கையில் வேல்-உன் கையிலுள்ள வேல்
போற்றி – நீண்டநாள் வாழவேணும்
என்று என்று-என்று இப்படிப் பலதடவை மங்களாசாஸனம் பண்ணிக்கொண்டு
உன் சேவகமே-உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி-புகழ்ந்து
பறைகொள்வான் பறைகொள்வதற்காக
யாம்-நாங்கள்
இங்கு-இவ்விடத்திற்கு
வந்தோம்-வந்துசேர்ந்தோம்
இரங்கு-கிருபை புரியவேண்டும்