பாசுரம்:
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பதவுரை:
கூடாரை-தன் அடிபணியாதாரை
வெல்லும் சீர்-ஜயிக்கின்ற குணங்களையுடைய
கோவிந்தா-கோவிந்தனே!
உன் தன்னை-உன்னை
பாடி-வாயாரப்பாடி
பறை கொண்டு- பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம் – (மேலும்) நாங்கள் அடையவிருக்கும் பரிசாவது
நாடு புகழும் பரிசினால்-
ஊரார் புகழும்படியாக
சூடகம்—(கைக்கு ஆபரணமான)
சூடகங்களும்
தோள்வளை – தோள்வளைகளும்
தோடு- (காதுக்கு ஆபரணமான) தோடுகளும்
செவிப்பூ — கர்ண புஷ்பமும்
பாடகம்-(காலுக்கு ஆபரணமான) பாதகடகமும்
என்று அனைய பல் கலனும்-என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களையும்
யாம் நன்றாக அணிவோம்-(உன்னாலும் நப்பின்னையாலும் அணிவிக்கப்பட்ட) நாங்கள் நன்றாக அணிந்துகொள்வோம்
ஆடை-(உங்களால் அணிவிக்கப்ட்ட) ஆடைகளை
உடுப்போம்- உடுத்திக்கொள்வோம்
அதன் பின்னே -அதற்குப் பிறகு
பால் சோறு – பாலாலே சமைக்கப்பட்ட சோறு
மூட-மறையும் படியாக
நெய் பெய்து-நெய்யை இட்டு
முழங்கை வழி வார- முழங்கையால் வழியும்படியாக
கூடி இருந்து-(நாம்) ஒன்றாக இருந்து (உண்டு)
குளிர்ந்து-குளிரவேணும்.