பாசுரம்:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயல் உகள
பூங்கு வளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை:
ஓங்கி – உயர வளர்ந்து,
உலகு-மூன்று உலகங்களையும்,
அளந்த-(தன் திருவடிகளாலே) அளந்து கொண்ட,
உத்தமன்-புருஷோத்தமனுடைய,
பேர் – திருநாமங்களை,
நாங்கள் பாடி-(திருநாமத்தைச் சொல்லாவிடில் உயிர் வாழகில்லாத) நாங்கள் பாடி,
நம் பாவைக்கு சாற்றி-எங்கள் நோன்புக்கு என்றொரு காரணத்தை முன்னிட்டு
நீராடினால்-ஸ்நாநம் செய்தால்,
நாடு எல்லாம்-தேசமெங்கும்
தீங்கு இன்றி-ஒரு தீமையுமில்லாமல்,
திங்கள் – மாதந்தோறும்,
மும்மாரி பெய்து-மூன்று மழை பெய்திட,
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு- உயர்ந்து பருத்த சிவந்த நெற்பயிர்களின் நடுவே.
கயல் உகள-கயல் மீன்கள் துள்ள
பொறி வண்டு- அழகிய வண்டுகள்,
பூம் குவளைப் போதில் – அழகிய நெய்தல் மலரான குவளை மலரிலே.
கண் படுப்ப-உறங்க,
வள்ளல்-வண்மையை உடையனவாய்.
பெரும் பசுக்கள் – பெருத்திருப்பனவான பசுக்கள்,
தேங்காதே-ஏங்காமல்
புக்கு-(பால் கறக்கப்) புகுந்து
இருந்து – நிலையாக இருந்து
சீர்த்த முலை-பருத்த முலைகளை
பற்றி—இரு கைகளாலும் அணைத்து,
வாங்க-இழுக்க.
குடம் நிறைக்கும்-குடங்களை நிறைக்கும்;
நீங்காத செல்வம் – (இப்படிப்பட்ட) அழிவில்லாத ஸம்பத்து.
நிறைந்து – நிறைந்திடும்
(ஏல் ஓர் எம்பாவாய் – அசைகள்.)