பாசுரம்:
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை யணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பா ரீரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்குந் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
பதவுரை:
வங்கம் கடல் – கப்பல்களையுடைய திருப்பாற்கடலை
கடைந்த-(தேவர்களுக்காகக்) கடைந்த
மாதவனை- ஸ்ரீய:பதியான
கேசவனை – கண்ணபிரானை
திங்கள் திருமுகத்து சே இழையார் – சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று- அடைந்து
இறைஞ்சி – வணங்கி
அங்கு- அத்திருவாய்ப்பாடியில்
அப் பறை கொண்ட ஆற்றை – பிரஸித்தமான (தங்கள்) புருஷார்த்தத்தைப்பெற்ற வருத்தாந்தத்தை
அணிபுதுவை – அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த
பை கமலம் தண் தெரியல் பட்டர்பிரான் – பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான குளிர்ந்த மாலையையுடைய பெரியாழ்வாருடைய திருமகளான
கோதை – ஆண்டாள்.
சொன்ன – அருளிச்செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும் – திரள் திரளாக அநுபவிக்கவேண்டிய தமிழ்மாலையாகிய இம்முப்பது பாசுரங்களையும்
தப்பாமே – தப்பாமல்
இங்கு – இந்நிலத்தில்
இ பரிசு – இவ்விதமாக
உரைப்பார் – ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்- பெரியமலைபோன்ற நான்கு திருத் தோள்களையுடையனும்
செம்கண் திருமுகத்து – சிவந்த திருமுகத்தையுடையவனும்
செல்வம் – ஐச்வர்யத்தையுடையனும்
திருமாலால் – ஸ்ரீமானுமான எம்பெருமானாலே
எங்கும் – எல்லாவிடத்தும்
திருஅருள் பெற்று – (அவனுடைய) க்ருபையைப்பெற்று
இன்புறுவர் – ஆனந்தமுறுவர்