பாசுரம்:
ஆழி மழைக்கண்ணா! ஒன்று(ம்) நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
பதவுரை:
ஆழி-கடல்போலே கம்பீரமான ஸ்வபாவத்னயுடைய.
மழைக்கண்ணா!- மழைக்குத் தலைவனான வருணதேவனே!
நீ-நீ,
ஒன்றும் – சிறிதும்,
கை கரவேல்-ஒளிக்கக்கூடாது;
ஆழியுள் புக்கு-ஸமுத்திரத்தினுள் புகுந்து.
முகந்து கொடு- (அங்குள்ள நீரை) மொண்டுகொண்டு,
ஆர்த்து-இடிஇடித்துக்கொண்டு.
ஏறி – ஆகாசத்தில் ஏறி.
ஊழி முதல்வன்-காலம் முதலிய ஸகலபதார்த்தங்களுக்கும் காரணபூதனான எம்பெருமானுடைய,
உருவம் போல்-திருமேனிபோல்,
மெய் கறுத்து—உடம்பு கறுத்து.
பாழி அம்தோள் உடை – பெருமையையும் அழகையும்
கொண்ட தோளையுடையவனும்,
பற்பநாபன் கையில்-நாபீகமலத்தை
யுடையவனுமான எம்பிரானுடைய வலது கையிலுள்ள,
ஆழி போல் மின்னி – திருவாழியாழ்வானைப் போலே மின்னி.
வலம்புரிபோல் -(இடது கையிலுள்ள) பாஞ்சஜன்யாழ்வானைப்போலே.
நின்று அதிர்ந்து- நிலை நின்று முழங்கி,
தாழாதே- காலதாமதம் செய்யாதே.
சார்ங்கம் உதைத்த சரமழை போல்- ஸ்ரீஸார்ங்கத்தினாலே தள்ளப்பட்ட பாணவர்ஷம்போல்.
வாழ- (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்,
நாங்களும்- (நோன்பு நோற்கும்) நாங்களும்.
மகிழ்ந்து – ஸந்தோஷத்துடன்,
மார்கழி நீராட – மார்கழி
நீராடும்படியாகவும்.
பெய்திடாய்- மழை பெய்வாயாக.