பாசுரம்:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.
பதவுரை:
மாயனை – ஆச்சரியமான செயல்களை உடையவனும்,
மன்னு வடமதுரை மைந்தனை – (நித்யமான பகவத்ஸம்பந்தத்தாலே) விளங்காநின்றுள்ள வடமதுரைக்கு அரசனும்.
தூய பெரு நீர் – பரிசுத்தமானதும் ஆழம் மிக்கிருப்பதுமான நீரையுடைய.
யமுனைத்துறைவனை -யமுனைக்கரையிலே விளையாடுபவனும்,
ஆயர் குலத்தினில் தோன்றும் – இடைக்குலத்தில் திருவவதரித்த,
அணிவிளக்கை – மங்கள தீபம்
போன்றவனும்
தாயை குடல் விளக்கம் செய்த – தாயாகிய யசோதைப்பிராட்டியின் திருவயிற்றை விளங்கச்செய்த
தாமோதரனை-(கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய) எம்பிரானை.
நாம்—(அவனால் அணுகத்தக்க) நாம்.
தூயோம் ஆய் வந்து-பரிசுத்தர்களாகக் கிட்டி,
தூமலர் தூவி – நல்ல மலர்களைத் தூவி,
தொழுது-வணங்கி
வாயினால் பாடி-வாயாரப்பாடி
மனத்தினால் சிந்திக்க-மனத்
தாலே தியானிக்க.
போய பிழையும்—(பகவத் ஸம்பந்த
முண்டாவதற்கு முன்) கழிந்த பாபங்களும்
புகுதருவான் நின்றனவும்-பின்பு (நம்மையறியாமல்) வருபவையும்
தீயினில் தூசு ஆகும்-நெருப்பிலிட்ட பஞ்சுபோலே உருவழிந்துபோகும்
செப்பு-(ஆகையாலே) அவனைப்பாடு.