பாசுரம்:
கீசு கீசென்(று) எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசலனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
பதவுரை:
பேய்ப் பெண்ணே!- (பகவத் விஷயரஸத்தை அறிந்தும் மறந்து கிடக்கிற) மதிகெட்ட பெண்ணே!
எங்கும்-எல்லா திசைகளிலும்
ஆனைச் சாத்தன்-வலியன் என்னும் பரத்வாஜ பக்ஷிகள்
கீசு கீசு என்று-கீச்சு கீச்சு என்று
பேசின-பேசிய
பேச்சு அரவம்-பேச்சின் ஒலியை
கேட்டிலையோ-(நீ)கேட்கவில்லையோ?
வாசம் நறும் குழல்-மிக்க பரிமளத்தையுடைய மயிர் முடியையுடைய
ஆய்ச்சியர் – இடைச்சிகளுடைய
காசும் – அச்சுத்தாலியும்
பிறப்பும்-முளைத்தாலியும்
கலகலப்ப- கலகலவென்று ஒலிக்கும்படியாக
கை பேர்த்து-கைகளை அசைத்து
மத்தினால்-மத்தினாலே
ஓசை படுத்த—ஓசைபடுத்திய
தயிர் அரவம்-தயிரோசையையும்
கேட்டிலையோ- (நீ) கேட்கவில்லையோ?
நாயகப் பெண் பிள்ளாய்- பெண்களுக்கெல்லாம் தலைவியாயிருப்பவளே!
நாராயணன் மூர்த்தி கேசவனை – நாராயணனுடைய அவதாரமான கண்ணனை
பாடவும்– (நாங்கள்) பாடச்செய்தேயும்
நீ-நீ
கேட்டே கிடத்தியோ—(அப்பாட்டைக்) கேட்டும் (இப்படிக்) கிடக்கலாமோ?
தேசம் உடையாய்-மிகுந்த தேஜஸ்ஸை உடையவளே!
திற-கதவைத் திறந்துவிடு