பாசுரம்:
கீழ்வானம் வெள்ளென்(று) எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்(து) உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைப
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்(று) ஆராய்ந்(து) அருளேலோரெம்பாவாய்.
பதவுரை:
கோதுகலம் உடைய பாவாய் (கிருஷ்ணனுடைய) விருப்பத்தையுடைய பெண்ணே!
கீழ் வானம் – கிழக்கு திக்கில் ஆகாசமானது
வெள்ளென்று-வெளுத்தது
எருமை-எருமைகள்
மேய்வான்-(பனிப்புல்) மேய்கைக்காக
சிறு வீடு-(வீடியற்காலையில்) சிறிதுநேரம் அவிழ்த்து விடப்பட்டு
பரந்தன காண் -(வயல்களெங்கும்) பரவின
போவான் போகின்றார்- போவதையே ப்ரயோ ஜனமாகக்கொண்டு போகின்றவர்களான
மிக்குள்ள பிள்ளைகளையும்-மற்றுமுள்ள பெண் பிள்ளைகளையும்
போகாமல் காத்து-போகாதபடி
தடுத்து
உன்னைக் கூவுவான் – உன்னைக் கூப்பிடுவதற்காக
வந்து நின்றோம்-(உன் வாசலில்) வந்து நிலையாக நின்றோம்
எழுந்திராய்-எழுந்திரு
பாடி-(கண்ணனுடைய குணங்களை
பாடி
பறை கொண்டு-(அவனிடம்) பறையைப்பெற்று
மா வாய் பிளந்தானை – குதிரை வடிவு கொண்ட கேசியின்
வாயைப் பிளந்தவனும்
மல்லரை மாட்டிய-(சாணூரமுஷ்டிகர்கள் என்னும்) மல்லர்களை அழியச் செய்தவனும்
தேவாதி தேவனை- நித்யஸூரிகளுக்கெல்லாம் தலைவனுமான அவனை
நாம் சென்று சேவித்தால்-நாம் (அவனிடம்) சென்று பணிந்தால்
ஆராய்ந்து-(நம்முடைய குறைகளை) விசாரித்து
ஆ ஆ என்று அருள்-ஐயோ! என்று தயை பண்ணுவன்.