ஸ்ரீ லக்ஷ்மீ ஸுதர்சன பீடம்

SLS Peetam Logo final 2

ஸ்ரீ:யப் பதியான ஸர்வேஸ்வரனான ஸ்ரீமன் நாராயணனின் க்ருபையினாலே
ஸ்ரீ பூ நீளா நாயிகா ஸமேத ஸ்ரீ தண்டிகை ரெங்கநாதஸ்வாமி தேவஸ்தானத்தின் திருவாராதன நிர்வாகத்திற்காகவும் சிஷ்ய பரிபாலனத்திற்காகவும் அம்ஸவாடி திருவம்சத்தினரால் பல நூறு வருடங்களுக்கு முன்பு “ஸ்ரீ லக்ஷ்மீ ஸுதர்சன பீடம்” தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

அம்ஸவாடி திருவம்சம்

குலோத்துங்க சோழனால் துன்புறுத்தப்பட இருந்த ஸ்வாமி ராமானுஜரை, ஸ்வாமி கூரத்தாழ்வான் தானே காஷாயம் தரித்து ஸ்வாமி எம்பெருமானரைப்போலே இருந்துகொண்டு ஸ்வாமி ராமானுஜரை ரக்ஷித்து மேல்நாட்டிற்கு செல்லும்படி வழிசெய்தார் என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வாறு செல்லும்போது ஒரு நாள் திருமலைநல்லான் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு அம்ஸவாடி என்னும் கிராமத்தில் இரவு ஸ்வாமி எம்பெருமானார் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவ்வூரில் வசித்த “ஸ்ரீமான். கிருஷ்ணய்யங்கார்” என்பவரின் திருமாளிகையில் ஸ்வாமி ராமானுஜர் தங்கினார்.

அப்போது ஸ்ரீமான். கிருஷ்ணய்யங்கார், தாம் ஆராதித்து வந்த சதுர்புஜ ராமரின் வைபவங்களை உரைக்க, எம்பெருமானாரும் ஸ்ரீமான். கிருஷ்ணய்யங்காருக்கு திருவாராதன க்ரமத்தை உபதேசித்து பாகவத பரிபாலனத்தையும் உபதேசித்து ஆசிர்வதித்து பின்பு மேல்நாட்டுக்கு (மேல்கோட்டைக்கு) எழுந்தருளினார் என்பது சரித்திரம். மேலும் ஓராண்வழியாய் அந்த திருவாராதன முறைகளும் உபதேசிக்கப்பட்டு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அம்ஸவாடியில் இருந்து “துணசிக்குட்டைக்கு”

கி.பி 1750க்கு பிறகு திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் பல இன்னல்களுக்கு ஆளான ஒக்கலிக மகா ஜனங்கள் அம்ஸவாடியில் இருந்து வேறு இடத்திற்கு சென்று தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள முடிவு செய்து ஊரைவிட்டு புறப்படும் போது தங்களுடன் நம் பெருமாளான “ஸ்ரீ சதுர் புஜ ராமரையும்” எழுந்தருளப் பண்ணிக்கொண்டு கொள்ளேகால் – சத்தியமங்கலம் வழியாக பல இடங்களில் சிற்றூராக ஏற்படுத்திக்கொண்டு தத்தமது வாழ்க்கையை வாழத்தொடங்கினர்.

அதுசமயம், சில ஒக்கலிக மகாஜனங்கள் “கோவிந்த பட்டாரகன்” என்பவரை தலைவனாகக்கொண்டு தற்போது நம் சன்னதி அமைந்திருக்கும் இடத்திற்கு பெருமாளுடன் வந்து துளசி வனமாக (துணசிக்குட்டை) இருக்கக்கண்டு, இங்கேயே பெருமாள் இருக்க வேண்டும் என்று நிச்சயித்து ஒரு சிறு சன்னதியை நிர்மாணம் செய்து கணம்-பில் வேய்ந்து அங்கேயே பெருமாளை எழுந்தருளப்பண்ணினர். (பழைய சன்னதியை இன்றும் காணலாம்).

பின்பு அந்த சமயத்தில் இந்த கோவை பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாண்டிய குறு நில மன்னர்களின் துணையோடு நம் பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் கட்டி வழிபட ஆவண செய்தார். பாண்டிய குறுநில மன்னர்களும் அவ்வழியே திருக்கோவிலும் கட்டிக்கொடுத்தனர். இன்னும் அவர்களின் நினைவாக சுவர்களிலும் தீபஸ்தம்பத்திலும் “மீன்” சின்னத்தைக்காணலாம்.

அதன் பின்பு ஸ்ரீ சதுர் புஜ ராமரை பிரதிஷ்டை செய்யும் போது, பெருமாள் திருமேனி சிதிலமடைந்ததனால் பல காலம் பெருமாள் இன்றியே சன்னதி இருந்தது (அந்த சிதிலமடைந்த திருமேனியை பழைய தெப்பக் குளத்தினுள்ளே இன்றும் காணலாம்).

அதன் பின்பு ஸ்ரீ எம்புஸ்வாமி அய்யங்கார் (8) பட்டத்திற்கு வரும் போது, பெருமாள் திருமேனியை பிரதிஷ்டை செய்ய ஆவண செய்து அவரது திருக்குமாரர் ஸ்ரீ யதிராஜ ஐயங்கார் (9) காலத்தில் தற்போது நம்மை காத்து ரக்ஷித்து வரும் ஸ்ரீ தண்டிகை ரெங்கநாதஸ்வாமி பிரதிஷ்டை திருமேனி செய்யப்பட்டது.

சதுர் புஜ ராமர் வீராஸனம் கொண்டு மலையில் தனித்த திருமேனியாக கூடாது என்பதை கருத்தில் கொண்டும் அந்த திருமேனி பின்னமான காரணத்தினாலும்  ஸௌம்ய சாந்த மூர்த்தியாக ஸ்ரீ ரெங்கநாதரை (சதுர் புஜ ராமரின் அம்சமாக) பிரதிஷ்டை செய்தனர்.

தண்டிகை என்பது தமிழில் பல்லக்கைக் குறிக்கும். அம்ஸவாடியில் இருந்து துணசிக்குட்டைக்கு பெருமாள் பல்லக்கில் எழுந்தருளினபடியால் “ஸ்ரீ தண்டிகை ரெங்கநாதர்” என்றும் திருநாமம் சாற்றப்பெற்று திகழ்கிறார்.

“ஸ்ரீ லக்ஷ்மீ ஸுதர்சன டிரஸ்ட்”

தற்போது, கடந்த 2021ம் வருடம் நவம்பர் 25ம் நாள் அன்று “ஸ்ரீ லக்ஷ்மீ ஸுதர்சன டிரஸ்ட்” என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பான வகையில் பல கைங்கர்யங்கள் நடைபெற்று வருகின்றன. 80G ஒப்புதல் பெறப்பட்ட அறக்கட்டளை; நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிவிலக்கு உண்டு.

TRUST PAN: ABCTS8813J

80G & 12AA APPROVAL URN: ABCTS8813JF20221

வங்கி கணக்கு விபரம்:

Account Number259698583333
Account NameSHRI LAKSHMI SUDHARSANA TRUST
IFSCINDB0000853
BANKINDUSIND BANK LTD
BRANCHOppanakara Street BRANCH, Coimbatore City
Scroll to Top