தமிழ் மாசம் முதல் நாளுக்கு ஸம்ஸ்கிருதத்தில் ஸங்க்ரமணம் (நகர்ந்து செல்லுதல்) என்று பெயர்.
ஸூரிய தேவன் மேஷ ராசி முதல் 12 ராசிகளிலும் ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு ராசி வீதம் நகர்ந்து (ஸஞ்சாரம்) வருகிறார். ஒரு மாதம் முடிந்து அடுத்த மாதம் துவங்கும் மாதப்பிறப்பு நாள் ஸங்க்ரமணம் என்று அழைக்கப்படுகிறது.
மாதப்பிறப்பன்று என்ன செய்ய வேண்டும்?
ஸங்க்ரமணத்தன்று ஒவ்வொருவரும் நதிகளிலோ, ஏரி, குளம் அல்லது கிணறு ஆகியவற்றிலோ ஸ்னானம் செய்வது உத்தமம். குறைந்த பக்ஷம் வெண்ணீரைத்தவிர்த்து குளிர்ந்த ஜலத்திலாவது ஸங்க்ரமணத்தன்று ஸ்னானம் செய்ய வேண்டும். அன்றைய தினம் பகவானுக்கு ஆராதனம், தன்னால் இயன்ற அளவுக்கு வறியவர்களுக்கு, ஏழைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவும் தானமும் அளிக்க வேண்டும். இது அளப்பரிய பலன்களைக்கொடுக்கும். மேலும் ஸங்கிரமண தினத்தன்று ஸூரியநாராயணை ஆராதித்து ஆரோக்கியம், மற்றும் ஞானத்தை பெறலாம்.
ஒவ்வொரு ஸங்க்ரமணத்தன்றும் விதிப்படி செய்யப்படும் “ஹவ்யம்” எனப்படும் ஆராதனமும்,
ஹோமங்கள், தானங்கள் முதலானவைகளும், “கவ்யம்” எனப்படும் பித்ருக்களுக்காகச் செய்யப்படும் தர்ப்பணம், தானங்கள் முதலானவைகளும், ஸ்ரீஸூர்யநாராயணனை ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்தோத்ரம் சொல்லி ப்ரார்திப்பதும், அளப்பரிய பலன்களைத்தரும்.
மனிதப் பிறவியில் ஸங்க்ரமண தினத்தன்று செய்யப்பட்ட ஹோமங்கள், தானங்கள், ஆராதனைகளால் ஸந்தோஷமடையும் ஸூர்யநாராயணன், அதற்குத் தகுந்த இஹபர சுகங்களை இந்த ஜன்மா தொடங்கி மொத்தம் ஏழு ஜன்மாவில் அளிக்கிறார். ஆகவே ஸங்க்ரமண தினத்தை எல்லா புண்ணிய காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மாசப்பிறப்புக்கான நேரங்கள் என்ன?
ஸுரிய தேவனின் சஞ்சாரத்தைப்பொறுத்து ஒவ்வொரு மாதமும், மாசம் பிறக்கும் நேரங்கள் வேறுபடுகின்றன. ஸூரிய தேவன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் நேரமே மாதம் பிறப்பு. இந்த மாசப்பிறப்பு நேரம் ஒவ்வொரு மாதமும் மாறுபடும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் எப்போது செய்யவேண்டும்?
ஒவ்வொரு மாசம்பிறக்கும் போது பித்ருக்களுக்கு கட்டாயம் தர்பணம் செய்யவேண்டும். மாசம் பிறக்கும் நேரத்திற்கு முன்னதாகவோ, பின்போ புண்யகாலத்தில் (மாசப்பிறப்புக்கு முன்போ பின்போ உள்ள காலம் “புண்யகாலம்”) பித்ரு தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்.