இடது கையால் ஆசனம் இடக்கூடாது. இதனால் ஆயுள்பங்கம் ஏற்படும். இடது கையால் எண்ணெய் தேய்த்துக்கொள்வது புத்திரநாசத்திற்கு வழிவகுக்கும். இடது கையால் சோறு பரிமாறிக் கொண்டால் செல்வம் அழியும். இடது கையால் படுக்கையை விரிப்பது ஸ்தான (வசிப்பிடம்) நாசமாகும்.
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்திலும், சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கும் தானாக முன்வந்து உதவ வேண்டும். இது நம் கடமை ஆகும்.
கிருஹஸ்தன் (மணமானவன்) ஒற்றை ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. வாசலைப் பார்த்த வண்ணம் உட்கார்ந்து உண்ணலாகாது. மேலும் கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதும் கூடாது. பேசிக்கொண்டோ, கேலி, கிண்டல், தூஷணை, அதிக கோபத்தோடு சாப்பிடுவதும் கூடாது.
வஸ்திரம் இல்லாமல் (துணியில்லாமல்) குளிக்கக் கூடாது (நக்ந ஸ்னானம்). சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது. பகலில் வடக்கு நோக்கியும், இரவில் தெற்கு நோக்கியும் தான் கழிவறையை பயன்படுத்த வேண்டும். கோவணமின்றி (உள்ளாடை இன்றி), வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது. அதீத வறுமை உண்டாகும்.
பசுமாட்டை இகழ்வது, காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம். பசு மாட்டை, “கோமாதா”வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்தியடைய வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம். அமாவாஸ்யை மற்றும் துவாதசி அன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது பித்ரு தோஷங்களைப் போக்கும். பசுவின் கழுத்துக்கு கீழ் சொரிந்து கொடுப்பதான “கோ கண்டூயணம்” செய்வதன் மூலம் நாம் அறியாமல் செய்த பல பாவங்களை தொலைக்கலாம்.
கிழக்கு மற்றும் தெற்கு மட்டுமே தலை வைத்து தூங்க வேண்டும். தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது; தூங்குபவரை நீண்ட நேரம் உற்றுப் பார்க்கக் கூடாது. பகலில் உறங்குவது, மனைவியுடன் சேர்ந்திருப்பது கூடாது. காலையில் நித்யம், பாய், படுக்கை போன்றவற்றை மடித்தோ, சுருட்டியோ வைக்க வேண்டும். மற்றவர்கள் உபயோகிக்கும் படுக்கையை நாம் உபயோகிக்க கூடாது.
ஒரு காலால், மற்றொரு காலை தேய்த்துக்கழுவக் கூடாது. நெருப்புடன் இருக்கும் பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்த்து அணைக்கக் கூடாது; இதனால் பூமாதேவியின் கோபம் ஏற்பட்டு, பூமி, மனை போன்றவற்றை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய் விடும். பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் எந்தவித உறவும் கொள்ளக் கூடாது.
குரு மற்றும் பெற்ற தாயினுடைய சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள். அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், நிறம், உயரம், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை ஒருபோதும் குத்திக் காட்டிப் பேசக் கூடாது. முனிவர்கள், சித்தர்கள், ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், மற்ற ஸ்திரியின் நடத்தை – இந்த எதைப்பற்றியும் வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை பிரகடனப்படுத்துவதோ கூடாது.